சேலத்தில், டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம்
சேலத்தில் டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
சேலம்,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களுக்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்த இந்திய மருத்துவ சங்கம் அறிவித்திருந்தது.
சேலம் மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் பெரும்பாலான டாக்டர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பல தனியார் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டிருந்தது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
டாக்டர்களின் போராட்டம் காரணமாக முக்கிய அறுவை சிகிச்சைகளை தவிர மற்ற சாதாரண அறுவை சிகிச்சைகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டன. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
தனியார் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டதால் நோயாளிகள் ஏராளமானவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு படையெடுத்தனர். இதனால் ஆஸ்பத்திரியில் கூட்டம் அலைமோதியது. மேலும் ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர். மருத்துவ சேவை செய்யும் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை தாக்குதல்களை தடுக்க மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதே போல ஆத்தூர் பழைய பஸ் நிலையம் அருகே இந்திய மருத்துவ சங்கம் ஆத்தூர் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை தலைவர் லதா தலைமை தாங்கினார். இதில், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.. ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் மாதவன், பாலு, அருண் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story