ஓமலூர் அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓமலூர்,
ஓமலூர் அருகே காமலாபுரம் ஊராட்சி காட்டூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சரியாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீர் கேட்டு ஊராட்சி செயலாளரிடம் மனு கொடுத்தனர். ஆனால் தற்போது மழை பெய்யாததால் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே விரைவில் குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதாக தெரிகிறது.
எனினும் குடிநீர் வழங்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஓமலூர்- நாலுகால் பாலம் ரோட்டில் காட்டூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் ஊராட்சி செயலாளர் பாஸ்கர், ஓமலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மழைக்காலம் தொடங்கியதும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக நேற்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story