தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்தம்
நெல்லை மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் இறந்ததால் அவருடைய உறவினர்கள் பணியில் இருந்த 2 பயிற்சி டாக்டர்களை தாக்கினார்கள். இதை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள டாக்டர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து நேற்று காலை 6 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை மாநகரத்தில் உள்ள 250 தனியார் ஆஸ்பத்திரிகளும், நெல்லை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள 2 ஆயிரம் தனியார் மருத்துவமனைகளும் நேற்று காலை முதல் மூடப்பட்டு இருந்தது. மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரம் டாக்டர்களும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டது.
நெல்லையில் உள்ள தனியார் கண் மருத்துவமனை நேற்று காலை மூடப்பட்டு இருந்ததால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிப்பட்டனர். சில தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, முக்கிய அறுவை சிகிச்சைகள் மட்டும் நடந்தன.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்க நெல்லை மாவட்ட தலைவர் டாக்டர் அன்புராஜன் கூறுகையில், டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். முழு பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். எங்கள் கோரிக்கையை கலெக்டர் மற்றும் எம்.பி.க்களிடம் மனுவாக கொடுப்போம் என்றார். இந்த போராட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் நெல்லை அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டது. இதனால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
இதேபோல் தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் வழக்கம்போல் பணியாற்றினர். அரசு ஆஸ்பத்திரிகள் வழக்கம்போல் செயல்பட்டன.
இதற்கிடையே பணியிடங்களில் டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, இந்திய மருத்துவ சங்க குற்றாலம் கிளை சார்பில் தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் சவுந்தரராஜனிடம் டாக்டர்கள் கோரிக்கை மனு வழங்கினர். சங்க கிளை தலைவர் சீதாலட்சுமி, செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வள்ளியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வள்ளியூரில் இந்திய மருத்துவ சங்க கிளை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் கிறிஸ்டோபர் சாமுவேல் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கர வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story