இலவச வீட்டுமனை பட்டா கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று காலையில் நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லை டவுன், பாளையங்கோட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.
நெல்லை பேட்டை திருத்து அம்பேத்கர்நகர் மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தங்கள் ஊரில் பாதாள சாக்கடை கிணறு அமைக்க கூடாது என்று கூறி மனு கொடுத்தனர். நெல்லை காந்திநகரில் அனுமதி இல்லாமல் செயல்படும் பெண்கள் தங்கும் விடுதியை தடை செய்யவேண்டும் என்று கூறி அந்த பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் மனு கொடுத்தனர்.
நாம் தமிழர் கட்சியினர் நெல்லை சட்டமன்ற தொகுதி செயலாளர் செல்வானந்த் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அதில், கடந்த மே மாதம் 1-ந் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் தேர்தல் விதிமுறையின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. தேர்தல் விதிமுறை முடிந்தநிலையில் மீண்டும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டத்தை உடனே நடத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆலங்குளம் அருகே உள்ள கடங்கனேரி கிராம மக்கள் அ.தி.மு.க. பகுதி செயலாளர் ஜெனி தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், ஆலங்குளம் யூனியன் 14-வது வார்டில் இருந்து கடங்கனேரி பகுதி வாக்காளர்களை பிரித்து 11-வது வார்டில் அதாவது காவலாக்குறிச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. காவலாக்குறிச்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியை திரும்ப பெறவேண்டும். மீண்டும் பழைய முறைப்படியே இருக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திப்பட்டி பாப்பான்குளம் அருகே உள்ள விவசாய நிலத்தின் அருகில் ஆழ்துளை கிணறு அமைக்கக்கூடாது. வேறு இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும் என்று கூறி அந்த பகுதி மக்களும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story