திருச்செந்தூர், நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து தோப்பூரில் கடந்த 2018-2019-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12½ லட்சம் செலவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கு கடந்த 31-12-2018 அன்று புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
பின்னர் அங்கு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களின் குடிநீர் தேவைக்கு பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊர் தலைவர் நந்தகுமார், செயலாளர் சுரேஷ், பொருளாளர் செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சங்க தமிழன், மாவட்ட அமைப்பாளர்கள் தமிழ் பரிதி, விடுதலை செழியன், காங்கிரஸ் விவசாய பிரிவு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயந்திநாதன், தி.மு.க. நகர செயலாளர் சுடலை, முன்னாள் நகர பஞ்சாயத்து கவுன்சிலர் கோமதிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பழனிகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் நாகராஜன், பொறியாளர் சண்முகநாதன், சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல்முருகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கும் இடம் தொடர்பாக, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் மேற்படி பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது ஐகோர்ட்டு உத்தரவின்படி, தாசில்தார் மூலம் நில அளவீடு செய்யப்பட்டு, எதிர் மனுதாரருக்கு பதில் அனுப்பப்பட்டு விட்டது. எனவே இன்று (அதாவது நேற்று) முதல் பணிகள் தொடங்கப்பட்டு, இன்னும் 2 மாதத்திற்குள் முடிக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story