பணகுடி அருகே, ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தைப்புலி


பணகுடி அருகே, ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தைப்புலி
x
தினத்தந்தி 18 Jun 2019 3:30 AM IST (Updated: 18 Jun 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

பணகுடி அருகே தோட்டத்தில் புகுந்த சிறுத்தைப்புலி 3 ஆடுகளை கடித்துக் கொன்றது.

பணகுடி, 

நெல்லை மாவட்டம் பணகுடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 48). இவருக்கு சொந்தமான தோட்டம், பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தின் வடக்கு பகுதியில் உள்ளது. அந்த தோட்டத்தில் மணி என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். அவர், அந்த தோட்டத்தில் ஆட்டு கொட்டகையில் வளர்க்கப்படும் ஆடுகளை பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த தோட்டத்தில் உள்ள ஆட்டு கொட்டகைக்குள் சிறுத்தைப்புலி ஒன்று புகுந்தது. அந்த சிறுத்தைப்புலி, ஆடுகளை கடித்து குதறியது. இதனால் ஆடுகள் அலறின. உடனே கண் விழித்த மணி, ஆட்டு கொட்டகைக்கு சென்று பார்த்து சத்தம் போட்டார்.

அப்போது ஆட்டு கொட்டகையில் இருந்த சிறுத்தைப்புலி வெளியே ஓடியது. பின்னர் மணி, அங்கு சென்று பார்த்தபோது, அங்கு 3 ஆடுகள் இறந்து கிடந்தன. மேலும் சிறுத்தைப்புலி தாக்கியதில் சில ஆடுகள் காயம் அடைந்து இருந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சோலார் மின்வேலி சேதம் அடைந்ததால், அந்த வழியாக வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள செல்வராஜ் என்பவரது தோட்டத்தில் புகுந்த சிறுத்தைப்புலி, அங்கிருந்த நாயை கடித்து கொன்றது.

இதனால் மலையடிவாரத்தில் உள்ள தோட்டங்களுக்கு செல்ல விவசாயிகள் அச்சப்படுகின்றனர். எனவே பணகுடி அருகே தோட்டங்களில் உலாவும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடித்து, வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சேதம் அடைந்த சோலார் மின்வேலிகளை சீரமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Next Story