வெடி வைக்கும் போது வீடுகளில் விரிசல் விழுவதால் பாதிப்பு, கோவையில் புதிதாக கல்குவாரிகள் அமைக்க அனுமதி வழங்க கூடாது - கலெக்டரிடம் விவசாயிகள் மனு
வெடி வைக்கும் போது வீடுகளில் விரிசல் விழுவதால் கோவையில் புதிதாக கல்குவாரிகள் அமைக்க அனுமதி வழங்க கூடாது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். இதில் சாலை வசதி, ரேஷன்கார்டு, முதியோர் உதவித்தொகை, நடைபாதை, வீட்டு மனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.
அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
மேட்டுப்பாளையம் வட்டம் காரமடை ஒன்றியம் மூடுதுறை கிராமத்தில் 435 கல் குவாரிகள் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த பகுதிகளில், ஏற்கனவே இயங்கி வரும் கல்குவாரிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இநத நிலையில், புதிதாக கல்குவாரிகள் அமைக்க அனுமதி அளித்தால், விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் சூழல் ஏற்படும்.
கல்குவாரிகளில் பாறைகளை உடைக்க வெடி வைத்து தகர்க்கும் போது வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. அத்துடன் வெடி சத்தம் அதிகமாக இருப்பதால் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. எனவே புதிதாக கல்குவாரிகள் அமைக்க அனுமதி வழங்க கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
கிணத்துக்கடவு வட்டம் பனப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் இயங்கிவரும் ஒரு கல்குவாரியில் செயற்கை மணல் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. எனவே அந்த தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது..
அடுக்குமாடி குடியிருப்பு
ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை சங்க செயலாளர் அஸ்ரப் அலி தலைமையில் கோவை ஜீவா நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கோவை ஜீவா நகரில் 40 ஆண்டுகளாக வசிக்கும் எங்களை வீட்டை காலி செய்து விட்டு, கீரணத்தம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்ல வலியுறுத்தி வருகிறார்கள். இதற்காக ஒரு சிலருக்கு டோக்கனும் வழங்கப்பட்டு உள்ளது.
நாங்கள் கோவையில் கூலி வேலை செய்து வருவதால் புறநகர் பகுதிக்கு சென்றால் சரியான வேலைவாய்ப்பு கிடைக்காது. வாழ்வாதாரம் பாதிக்கும். குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும்.
இந்த நிலையில் நாங்கள் வீடுகளை காலி செய்யவில்லை என்றால் நாளை (இன்று) முதல் குடிநீர், மின்வினியோகம் துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சில வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. வீட்டை இடிக்கும் போது, மாநகராட்சியில் பணியாற்றிய தங்கவேல் என்பவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். எனவே நாங்கள் ஜீவாநகர் பகுதியிலேயே வசிக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஜீவா நகரில் உள்ள வீடுகளுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர துணை செயலாளர் கோட்டை சேது, தொகுதி செயலாளர் பாலசிங்கம் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் 45 பேர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கோவையில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.500 கோடிக்கும் மேல் மோசடி செய்து உள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்ட உரிமையாளரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என்றனர். முன்னதாக அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட 45 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story