கூடலூர் அருகே, வீட்டின் மீது ஜீப் கவிழ்ந்தது -முதியவர் உள்பட 2 பேர் படுகாயம்
கூடலூரில் ஜீப் கவிழ்ந்து வீடு இடிந்தது. இதில் முதியவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கூடலூர்,
கூடலூரில் இருந்து கோழிக்கோடுக்கு செல்லும் சாலையில் கோழிப்பாலம் பகுதி உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தமிழக- கேரள செல்லும் சாலை என்பதால், இந்த வழியாக வாகனங்கள் அதிகளவு இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் பந்தலூரில் இருந்து கூடலூர் நோக்கி நேற்று மதியம் 12.30 மணிக்கு ஜீப் ஒன்று வந்து கொண்டிருந்தது. கோழிப்பாலம் கடைவீதியை கடந்து ஒரு வளைவில் திரும்பியபோது, ஜீப் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. மேலும் சாலையோரம் சுமார் 50 அடி பள்ளத்தில் கட்டப்பட்டு இருந்த சையது அலி என்பவரது வீட்டின் மீது ஜீப் கவிழ்ந்தது.
இதில் வீட்டின் முன்பக்க அறைகள் கான்கிரீட் மேற்கூரைகளுடன் இடிந்தது. இந்த சமயத்தில் வீட்டில் இருந்த சையது அலியின் தந்தை மொய்தீன் குட்டி(வயது 81) என்பவர் படுகாயம் அடைந்தார். மீதமுள்ளவர்கள் வீட்டின் பின்பக்க அறைகளில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர். இதேபோல் ஜீப்பை ஓட்டி வந்த மணிகண்டன்(வயது 28) என்பவரும் படுகாயம் அடைந்தார்.
இதை கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து ஜீப்புக்குள் சிக்கி இருந்த மணிகண்டனை மீட்டனர். இதேபோல் மொய்தீன்குட்டியையும் இடிபாடுகளுக்கு இடையில் இருந்து வெளியே தூக்கி வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த மொய்தீன்குட்டி, மணிகண்டன் ஆகிய 2 பேரும் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story