செல்போனில் ஆபாச பேச்சு, தட்டிக்கேட்ட வாலிபர் மீது தாக்குதல்-பழ வியாபாரி உள்பட 3 பேர் மீது வழக்கு


செல்போனில் ஆபாச பேச்சு, தட்டிக்கேட்ட வாலிபர் மீது தாக்குதல்-பழ வியாபாரி உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 Jun 2019 3:45 AM IST (Updated: 18 Jun 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

செல்போனில் ஆபாசமாக பேசிய நபரை தட்டிக்கேட்ட வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து பழ வியாபாரி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வடவள்ளி,

கோவை வடவள்ளி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் குணசேகர் (வயது 33). இவருடைய தாயார் ஆன்லைன் மூலம் புதிதாக செல்போன் வாங்கினார். இந்த செல்போன் எண்ணுக்கு போன் செய்து ஒருவர் ஆபாசமாக பேசி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து குணசேகரிடம் கூறி உள்ளார்.

இதை தொடர்ந்து அந்த செல்போன் எண்ணுக்கு குணசேகரன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த நபர் வடவள்ளி பகுதியில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து குணசேகர் நேற்று இரவு 8 மணியளவில் வடவள்ளி பஸ் நிலையத்திற்கு, நேரில் சென்று அந்த நபரிடம் ஆபாசமாக பேசியது குறித்து தட்டி கேட்டு உள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து குணசேகரை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருடைய தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ராஜீவ்காந்தி நகர் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் வடவள்ளி பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவலின்பேரில் வடவள்ளி சப்-இன்ஸ்பெக்டர் மனோ தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த் தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், குணசேகரை தாக்கியது வடவள்ளியை சேர்ந்த பழ வியாபாரி சபாபதி மற்றும் அவருடைய நண்பர்கள் 2 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story