தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தம் - அரசு டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்


தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தம் - அரசு டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்
x
தினத்தந்தி 18 Jun 2019 4:30 AM IST (Updated: 18 Jun 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக கடலூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.

கடலூர்,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந்தேதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், அங்கு பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை தாக்கினர்.

இதை கண்டித்து அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக இந்திய மருத்துவ சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது.

இதன்படி நேற்று காலை 6 மணிக்கு வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. கடலூர் மாவட்டத்திலும் இந்திய மருத்துவ சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம் உள்பட மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை டாக்டர்கள் புறக்கணித்தனர். இதனால் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டு இருந்தன. ஒரு சில மருந்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

இருப்பினும் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைகள் வழக்கம் போல் நடந்தது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை விளக்கி கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் நோயாளிகளுக்கு சிரமம் அளிக்காமல் தங்கள் பணிகளை செய்தனர். ஆனால் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டு இருந்ததால், அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இது பற்றி இந்திய மருத்துவ சங்க கடலூர் கிளை செயலாளர் டாக்டர் கேசவன் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் 200 தனியார் மருத்துவ மனைகளில் உள்ள 800 டாக்டர்கள், இந்த போராடடத்தில் பங்கேற்று உள்ளனர்.

அவர்கள் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அத்தியாவசியம் இல்லாத பணிகளை மட்டும் புறக்கணித்து உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் போராட்டம் நடத்தி உள்ளோம். அடுத்த கட்ட போராட்டம் பற்றி தலைமை நிர்வாகிகள் அறிவித்தவுடன் தெரிவிப்போம் என்றார்.

Next Story