திண்டிவனம் கோர்ட்டில் பரபரப்பு, நீதிபதி முன்னிலையில் சாராய வியாபாரி தற்கொலை முயற்சி - பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டார்
திண்டிவனம் கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் பிளேடால் கழுத்தை அறுத்து சாராய வியாபாரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரோஷணை காலனியை சேர்ந்தவர் கிடங்கலான் என்கிற சரண்ராஜ் (வயது 28). இவர் சாராயம் விற்பனை செய்வது, கடத்துவது என தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பாக சரண்ராஜ் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதனிடையே ஒரு வழக்கு தொடர்பாக சரண்ராஜை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்திருந்தனர்.
இந்த நிலையில் சாராயம் விற்பனை செய்தது தொடர்பான வழக்கு திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் உள்ள கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜர்படுத்துவதற்காக சரண்ராஜை போலீசார் கடலூர் மத்திய சிறையில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் நீதிபதி முன்னிலையில் சரண்ராஜ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் சரண்ராஜ் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்து கோர்ட்டு ஊழியர்கள், போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனே அங்கிருந்த போலீசார், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது சரண்ராஜ் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சிகிச்சை முடிந்ததும் சரண்ராஜை போலீசார் அங்கிருந்து அழைத்து சென்றனர். முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரண்ராஜை செய்தியாளர்கள் செல்போனில் படம் பிடித்தனர். அப்போது போலீசார் அதனை தடுத்து செல்போனை பறித்தனர். பின்னர் அதனை திருப்பி கொடுத்தனர்.
சரண்ராஜ் ஏற்கனவே திண்டிவனம் கோர்ட்டு மற்றும் போலீஸ் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ள நிலையில் நேற்று மீண்டும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story