புதுமடம் ஊராட்சியில் துணை மின்நிலையம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


புதுமடம் ஊராட்சியில் துணை மின்நிலையம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Jun 2019 4:45 AM IST (Updated: 18 Jun 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

புதுமடம் ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உச்சிப்புளி மின் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுமடம் ஊராட்சிப்பகுதி உள்பட 27 கிலோமீட்டர் சுற்றளவிற்கு உச்சிப்புளியை மையமாக கொண்ட மின்சார அலுவலகத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சுமார் 15 ஊராட்சிகளுக்கு மையமாக திகழ்ந்து வரும் இந்த அலுவலகத்தில் 180 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த 15 ஊராட்சி பகுதிகளுக்கும் 13 நிரந்தர வயர்மேன்களும், 12 தற்காலிக ஊழியர்களும் பணியமர்த்தப்பட்டு வேலைகளை கவனித்து வர வேண்டும். கடந்த 5 வருடங்களாக 2 வயர்மேன்களை மட்டும் வைத்துக்கொண்டு அவ்வப்போது நடக்கக்கூடிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 18 ஆயிரம் சர்வீஸ் இணைப்புகளை கொண்ட இந்த அலுவலகத்தில் போதுமான அலுவலர்களும் நியமிக்கப்படாமல் உள்ளனர் என்பதும் இப்பகுதி மக்களின் நீண்ட கால குற்றச்சாட்டு. மண்டபம் யூனியன் உச்சிப்புளி மிகவும் முக்கியத்துவம் பெற்ற பகுதி. இங்கு மத்திய அரசுக்கு சொந்தமான கடற்படை தளம் மற்றும் பல்வேறு மாநில அரசு அலுவலகங்களும் உள்ளன.

இந்த நிலையில் மண்டபம் யூனியனுக்கு அதிகமாக வருவாய் கிடைக்கக் கூடிய புதுமடம் ஊராட்சியில் மின்வினியோகம் செய்வதில் குளறுபடியாக தொடர்கிறது. பனை தொழிலாளர்கள், மீனவர்கள் வசிக்கக்கூடிய புதுமடம் ஊராட்சியில் 12 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. ஆனால் குறைந்த அழுத்த மின்சாரமே வினியோகம் செய்யப்படுகிறது. இதுபற்றி இப்பகுதி மக்கள் மின்வாரிய உயர் அதிகாரிகள், உச்சிப்புளி நிர்வாக அலுவலர் என பலரிடம் கோரிக்கை வைத்தும் இதனை மின்சாரத்துறையினர் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக மின்வாரிய துறையை கண்டித்தும் புதுமடம் ஊராட்சியில் துணை மின்நிலையம் அமைக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் உச்சிப்புளி மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுமடம் கிராமத்தைச் சேர்ந்த நிலோபர் கான் தலைமையில் கல்யாண சுந்தரம், சமூக ஆர்வலர் அனீஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். புதுமடம் ஊராட்சி முன்னாள் துணை தலைவர் ஸ்ரீதரன், உச்சிப்புளி வர்த்தக பிரமுகர் ரவிச்சந்திரன் மற்றும் புதுமடத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். முடிவில் உச்சிப்புளி துணை மின் பொறியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை உச்சிப்புளி போலீசார் செய்திருந்தனர்.

Next Story