வறட்சி எதிரொலி: “ஒரு குடம் தண்ணீர் ரூ.20-க்கு வாங்குகிறோம்” பெண்கள் குமுறல்


வறட்சி எதிரொலி: “ஒரு குடம் தண்ணீர் ரூ.20-க்கு வாங்குகிறோம்”  பெண்கள் குமுறல்
x
தினத்தந்தி 18 Jun 2019 5:00 AM IST (Updated: 18 Jun 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் கடும் வறட்சி காரணமாக ஒரு குடம் தண்ணீர் ரூ.20-க்கு விலை கொடுத்து வாங்குவதாக பெண்கள் கடும் அதிருப்தியுடன் கூறினர்.

சிவகங்கை,

மாவட்டத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்மாய், ஊருணிகள் உள்ளன. இவற்றில் தேங்கும் மழைநீரைத்தான் அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக போதிய மழை இல்லாததாலும், வைகை ஆற்றில் மணல் கொள்ளையினாலும் இந்த பகுதியில் நீர்வளம் குறைந்து கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது. இளையான்குடி பகுதியில் குடி நீருக்கே மக்கள் திண்டாடும் நிலை உள்ளது.

இளையான்குடி டவுன் பகுதி, குமாரக்குறிச்சி, கோட்டையூர், தெற்கு கீரனூர், கருஞ்சுத்தி, கரும்புக்கூட்டம், ஒச்சன்தட்டு, கண்ணமங்கலம், தாயமங்கலம், வாணி, பகைவரை வென்றான், கல்லூரணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தற்போது கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் 20 நாட்களுக்கு ஒருமுறை தான் வருகிறது.

காவிரி கூட்டுக்குடிநீர் செல்லும் சில இடங்களில் நூதன முறையில் சிலர் குழாயை உடைத்து அதிலிருந்து தண்ணீர் திருடி எடுத்து அதை இரவு நேரங்களில் தண்ணீர் லாரி மற்றும் டிராக்டரில் ஏற்றிச் சென்று கட்டுமான தொழில் மற்றும் குடிதண்ணீருக்காக விற்பனை செய்து வருகின்றனர்.

குடிதண்ணீர் ஒரு குடம் ரூ.10-க்கும், கட்டுமான தொழில் வேலைக்கு ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.3ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரையும் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் சில இடங்களில் மினி டேங்கர் லாரியில் இந்த தண்ணீரை பிடித்து ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.

எனவே இந்த பகுதியில் காவிரி கூட்டுக் குடிதண்ணீரை சேமித்து அவற்றை மக்கள் வினியோகத்திற்கு பயன்படுத்த வேண்டும். நூதன முறையில் குடிதண்ணீரை திருடும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்கால், முத்துப்பட்டி, வாணியங்குடி, பொட்டக்குடி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் தற்போது கடும் குடிதண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இதையடுத்து இந்த பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீரை பிடித்து வருகின் றனர். இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை ஒரு குடம் ரூ.20-க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் காளையார்கோவிலை அடுத்த மறவமங்கலத்தை சுற்றியுள்ள பகையஞ்சான், கிராம்புலி, தேன்பார், விளாங்காட்டூர், பளுவாக்கொடை, திரியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் விளாங்காட்டூர் வழியாக செல்லும் ஆற்றில் குழிதோண்டி அதில் வரும் தண்ணீரை எடுத்து சில மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் அதிலும் தற்போது தண்ணீர் இல்லாததால் தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. மானாமதுரையில் உள்ள சில பகுதிகள், முத்தனேந்தல் உள்ளிட்ட பகுதியிலும், திருப்பத்தூரைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலும், தேவகோட்டையை சுற்றியுள்ள சில கிராமங்களிலும் குடிதண்ணீர் பற்றாக்குறை நீடித்து வருகிறது.

Next Story