கடல்மீன் வளம் பாதிக்கப்படுவதால் புதுச்சேரியிலும் சுருக்கு வலை மூலம் மீன்பிடிக்க தடை வருகிறது


கடல்மீன் வளம் பாதிக்கப்படுவதால் புதுச்சேரியிலும் சுருக்கு வலை மூலம் மீன்பிடிக்க தடை வருகிறது
x
தினத்தந்தி 17 Jun 2019 11:34 PM GMT (Updated: 17 Jun 2019 11:34 PM GMT)

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் சுருக்கு வலை கொண்டு மீன்பிடிக்க தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் அந்த தடையை அமல்படுத்த புதுச்சேரி அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

கடலில் மீன்வளத்தை சுருக்கு வலையானது அடியோடு சுரண்டி வருகிறது. இதைத்தொடர்ந்து கடலில் சுருக்கு வலை கொண்டு மீன்பிடிப்பதை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்த தடையை அமல்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.

இதன் எதிரொலியாக தமிழகம், ஆந்திரா, கேரள மாநிலங்களில் சுருக்கு வலை தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுவையில் சுருக்கு வலைக்கு இதுவரை தடை வழங்கப்படவில்லை. இதனால் புதுச்சேரி மீனவர்கள் சுருக்கு வலை கொண்டு மீன்பிடித்து வருகின்றனர்.

இதைக்கொண்டு பிற மாநில கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கும்போது அம்மாநில மீன்வளத்துறை அதிகாரிகள் வலைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். சமீபத்தில் இதேபோல் புதுச்சேரி, ஏனாம் பகுதி மீனவர்களின் வலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வலைகளை மீட்டுத்தருமாறு மீனவர்கள் நேற்று மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என்று அவர்களிடம் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் உறுதி அளித்தார்.

அப்போது அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 4 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி மீனவர்கள் பயன்படுத்திய சுருக்கு வலையை தமிழக அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசி உள்ளேன். சுருக்கு வலையை பயன்படுத்தியதற்கான அபராதத்தையும் கட்ட தயாராக உள்ளோம். இதுகுறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

சுருக்கு வலையை தடை செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. புதுச்சேரியில் இந்த தடையை அமல்படுத்த காலஅவகாசம் வேண்டுமென நான் கோரியுள்ளேன். இதுதொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய மீன்வளத்துறை இணை செயலாளரையும் சந்தித்து பேச உள்ளேன்.

சுருக்கு வலையை பயன்படுத்தாவிட்டால் அதற்கு மாற்றாக வலைகள், நிவாரணம் வழங்குவது தொடர்பாக வருகிற 25-ந்தேதி கடலோர பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி எம்.எல்.ஏ.க்கள், மீனவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.

இவ்வாறு அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் கூறினார்.

Next Story