கோவையில் 2-வது நாளாக 523 கடைகளில் சோதனை - 80 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்


கோவையில் 2-வது நாளாக 523 கடைகளில் சோதனை - 80 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Jun 2019 4:00 AM IST (Updated: 19 Jun 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 2-வது நாளாக 523 கடைகளில் சோதனை நடத்தி, 80 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை,

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துவர்கள் மீது கோவை மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று 2-வது நாளாக அதிகாரிகள் இந்த சோதனையை தீவிரப்படுத்தினார்கள்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூமார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி, பூக்களை கட்டிக்கொடுக்க பயன்படுத்திய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். நகரம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 80 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை வடக்கு மண்டல பகுதியில் 86 கடைகளில் சோதனை நடத்தப்பட்டு 9 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.4,700 அபராதம் விதிக்கப்பட்டது.

தெற்கு மண்டலத்தில் 78 கடைகளில் சோதனை நடத்தப்பட்டு 5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கிழக்கு மண்டல பகுதியில் 145 கடைகளில் 15 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேற்கு மண்டலத்தில் 119 கடைகளில் 35 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.11,600 அபராதமும், மத்திய மண்டலத்தில் 95 கடைகளில் 16 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.5,100-ம் அபராதமும் விதிக்கப்பட்டதாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் சந்தோ‌‌ஷ்குமார் கூறினார்.

நேற்று ஒரே நாளில் மொத்தம் 523 கடைகளில் சோதனை நடத்தி ரூ.27,400 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 6 மாதங்களில் 12,684 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.13 லட்சத்து 22 ஆயிரத்து 660 அபராதம் விதிக்கபட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story