கூடலூர் அருகே, கோவிலை சேதப்படுத்திய காட்டு யானைகள் - பொதுமக்கள் பீதி


கூடலூர் அருகே, கோவிலை சேதப்படுத்திய காட்டு யானைகள் - பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 17 Jun 2019 11:00 PM GMT (Updated: 18 Jun 2019 7:02 PM GMT)

கூடலூர் அருகே காட்டு யானைகள் கோவிலை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகளால் தினமும் பல்வேறு பிரச்சினைகள் உருவெடுக்கின்றன. கூடலூர் அருகே பாண்டியாறு அரசு தேயிலை தோட்டம் நெம்பர் 4பி பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை நேற்று முன்தினம் நள்ளிரவு 13 காட்டு யானைகள் கூட்டமாக வந்து சேதப்படுத்தின. இதில் கோவிலின் இரும்பு கதவு மற்றும் பிரசாதங்கள் செய்யும் பாத்திரங்கள் சேதமடைந்தன.

கோவிலில் பொருட்கள் வைக்கும் கட்டிடத்தை யானைகள் இடித்து சேதப்படுத்தின. பின்னர் கதவுகளை உடைத்து குட்டி யானைகள் உள்ளே புகுந்தன. தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள், பாத்திரங்களை சேதப்படுத்தின.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் பச்சை தேயிலை பறிக்கும் பணிக்கு வந்த தோட்ட தொழிலாளர்கள் கோவிலை காட்டு யானைகள் சேதப்படுத்தி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது புதர்களுக்கு இடையே மறைந்து இருந்த காட்டு யானை ஒன்று தோட்ட தொழிலாளர்களை துரத்தியது. இதனால் தேயிலை தோட்டத்தை விட்டு தொழிலாளர்கள் வெளியேறி மாரியம்மன் கோவில் வளாகத்துக்கு வந்து நின்றனர். பின்னர் காட்டு யானைகளால் தொழிலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே காட்டு யானைகள் குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டத்துக்குள் வருவதை தடுக்க வேண்டும் என்று கோரி திடீர் என வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக டிவிஷனல் மேலாளர் ஸ்ரீதர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தோட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-

கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டு உள்ளன. இரவில் யானைகள் வீடுகளை முற்றுகையிடுகின்றன. மேலும் தொழிலாளர்களையும் அடிக்கடி விரட்டி வருகிறது. இதனால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் மாரியம்மன் கோவிலை 3 முறை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். காட்டு யானைகள் ஊருக்கு வருதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

காட்டு யானைகள் வருகையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தேயிலை தோட்ட கழக நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனிடையே காட்டு யானைகளும் அங்கிருந்து சென்றன. இதையொட்டி 1½ மணி நேரம் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story