குந்தா தாலுகாவில் ஜமாபந்தி, கிணற்றில் கழிவுநீர் கலப்பதால் குடிநீர் மாசடைகிறது - நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை


குந்தா தாலுகாவில் ஜமாபந்தி, கிணற்றில் கழிவுநீர் கலப்பதால் குடிநீர் மாசடைகிறது - நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 Jun 2019 3:45 AM IST (Updated: 19 Jun 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் கழிவுநீர் கலப்பதால் குடிநீர் மாசடைகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குந்தாவில் நடந்த ஜமாபந்தியில் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் 1428-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நேற்று அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடைபெற்றது. ஊட்டியில் நடந்த ஜமாபந்திக்கு தனி துணை ஆட்சியர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் தும்மனட்டி, எப்பநாடு, கக்குச்சி, கூக்கல், தூனேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

ஊட்டியில் கூட்டு பட்டாவை தனிப்பட்டாவாக பிரிக்க கோருவது, முதியோர் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியம், விவசாயிகளுக்கான உதவித்தொகை, அனுபோக சான்றிதழ் உள்பட மொத்தம் 472 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

கூடலூர் தாலுகாவில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் தலைமை தாங்கி தேவர்சோலை, ஸ்ரீமதுரை, முதுமலை, செருமுள்ளி, பெண்ணை பகுதியை சேர்ந்த மக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் தாசில்தார் ரவி உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) கூடலூர், ஓவேலி, தேவாலா, பாடந்தொரை உள்ளிட்ட பகுதி மக்கள் மனுக்கள் அளிக்கலாம் என வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல் பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

குந்தா தாலுகா அலுவலகத்தில் ஊட்டி கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் ஜமாபந்தி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஓணிகண்டி மற்றும் அண்ணாநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாசடைந்த தண்ணீரை பாட்டில்களில் எடுத்து வந்து மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

ஓணிக்கண்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் கூடுதல் குடிநீர் வசதிக்காக அண்ணாநகர் பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.15.50 லட்சம் மதிப்பீட்டில் கிணறு மற்றும் குடிநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபகாலமாக இந்த கிணற்றில் இருந்து வினியோகம் செய்யப்படும் குடிநீர் நிறம் மாறி துர்நாற்றம் வீசுகிறது. கிணற்றுக்கு அருகே உள்ள கால்வாயில் செல்லும் கழிவுநீர் கிணற்றில் கலப்பதால் குடிநீர் மாசடைகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் கீழ்குந்தா பேரூராட்சி குடிநீர் பணியாளர்களை அழைத்து விசாரித்தார். மேலும், மாசடைந்த தண்ணீரை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Next Story