சிவகிரி அருகே திருமணமான 6 மாதத்தில் பரிதாபம் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


சிவகிரி அருகே திருமணமான 6 மாதத்தில் பரிதாபம் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 19 Jun 2019 3:30 AM IST (Updated: 19 Jun 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்காசி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

சிவகிரி, 

சிவகிரி அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்காசி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

புதுப்பெண்

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள துரைச்சாமியாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 24) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி புஷ்பவள்ளி (19). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் 3 மாத கர்ப்பிணியான புஷ்பவள்ளி, ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு செல்ல திட்டமிட்டார். இதற்காக அவர், அப்பகுதியில் வசிக்கும் தன்னுடைய அக்காள் முத்துமணியிடம் சென்று, தனது ஆஸ்பத்திரி செலவுக்கு தந்தை சின்னச்சாமியிடம் பணம் வாங்கி வருமாறு கூறி உள்ளார்.

முத்துமணி, தங்கையின் ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் தருமாறு தந்தையிடம் கேட்டார். ஆனால் சின்னச்சாமி தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார்.

இதனை அறிந்த புஷ்பவள்ளி மனமுடைந்த நிலையில் இருந்தார். அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, சிவகிரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த புஷ்பவள்ளியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால், தென்காசி உதவி கலெக்டர் சவுந்தரராஜ் மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story