திருப்பூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட மேஸ்திரிக்கு 7 ஆண்டு சிறை
திருப்பூரில் 3–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட மேஸ்திரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் குப்பாண்டம்பாளையம் ஜோதிநகர் பகுதியை சேர்ந்தவர் ஹனிபா (வயது 62). இவர் கட்டிட மேஸ்திரி. இந்நிலையில் கடந்த 11–12–2018 அன்று அந்த பகுதியில் ஒரு வீட்டு மாடியில் டைல்ஸ் ஒட்டும் பணி செய்துகொண்டிருந்தார்.
அப்போது மதிய உணவு இடைவேளையின் போது 8 வயது உடைய 3–ம் வகுப்பு படிக்கும் மாணவி அங்கு விளையாடிக்கொண்டிருந்தாள். இதனை பார்த்த ஹனிபா அந்த மாணவியை மாடிக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனை அந்த பகுதியில் உள்ள சிலர் பார்த்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் மாணவியின் பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது பாலியல் தொல்லை கொடுத்ததை மாணவி உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஹனிபாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பளித்தார். அதில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக ஹனிபாவிற்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
இதனைத்தொடர்ந்து அவர் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் பரிமளா ஆஜராகியிருந்தார்.