விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்; கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை


விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்; கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 Jun 2019 5:00 AM IST (Updated: 19 Jun 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

விவசாய விளை நிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஜமாபந்தியில் கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர் .

காங்கேயம்,

காங்கேயம் தாலுகாவிற்கான ஜமாபந்தி கடந்த 14-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. காங்கேயம் தாலுகா அலுவலகத்தில் நேற்று 3-வது நாள் ஜமாபந்தி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடந்தது. இதில் நத்தக்காடையூர் வருவாய் உள் வட்டத்தை சேர்ந்த மரவபாளையம், கீரனூர், பாப்பினி, நால்ரோடு, பரஞ்சேர்வழி, மருதுறை, நத்தக்காடையூர், முள்ளிப்புரம், குட்டப்பாளையம், பழையகோட்டை ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவிதொகை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 582 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

இதில் 47 பேருக்கு பட்டா மாறுதல், 48 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவு உள்பட 138 பயனாளிகளுக்கு வழங்கி உடனடியாக தீர்வு காணப்பட் டது. இந்த ஜமாபந்தியில் காங்கேயம் தாசில்தார் விவேகானந்தன்,துணை தாசில்தார்கள் மோகனன் ,செந்தில்நாதன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர் .

இந்த ஜமாபந்தியின் போது விவசாயிகள் சார்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

பாரத் பெட்ரோலிய நிறுவன திட்டத்திற்கான நில எடுப்பு விவரங்கள் இந்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் விளைநிலங்கள் எடுப்பதற்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. உயர்மின் கோபுரங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டத்தில், இந்த திட்டம் செய்ல்படுத்தப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.

கெயில் குழாய் திட்டத்தை 2013 ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சாலையோரம் போட ஆணையிட்டார். எனவே, அதை பின்பற்றி விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு சாலையோரம் அமைக்க பரிந்துறை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல நிழலி கிராமம் புள்ளகாளிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக கொடுக்கப்பட்ட மனுவில், தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த நாங்கள் 20 குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறோம். கூலி வேலை செய்து வரும் எங்களுக்கு சொந்தமான வீடு, நிலமோ இல்லை. எனவே எங்களுக்கு இலவச வீட்டு மனை கேட்டு கடந்த ஓராண்டு காலமாக பலமுறை மனுக்கள் கொடுத்து வருகிறோம். எனவே,எங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி 20 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (புதன்கிழமை) 4- வது நாள் நடக்கும் ஜமாபந்தியில் வெள்ளகோவில் உள்வட்டத்தை சேர்ந்த முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், மங்கலப்பட்டி, வேலம்பாளையம், பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, மேட்டுப்பாளையம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.

Next Story