தந்தை இறந்ததால் மனவேதனை: காதலியும் விஷம் குடித்தார் - ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை


தந்தை இறந்ததால் மனவேதனை: காதலியும் விஷம் குடித்தார் - ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 19 Jun 2019 4:45 AM IST (Updated: 19 Jun 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

தந்தை இறந்ததால் மனவேதனையில் இருந்த நிலையில், காதலியும் விஷம் குடித்ததால் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்,

திருவாருர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா கார்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி விஜயா. இவர்களது மகன் நவீன்ராஜா(வயது 23). இவர், பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்து விட்டு வேலை தேடி வந்தார். இவரும், தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள முனியூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்த காதல் விவகாரத்தை தனது தாய் விஜயாவிடம் நவீன்ராஜா கூறி, காதலிக்கும் பெண்ணையே தான் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும்படி கேட்டார். இதற்கு விஜயா, நீ வேலைக்கு சென்று நல்ல நிலைக்கு வந்த பிறகு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு சுப்பிர மணியன் திடீரென இறந்து விட்டார். தந்தையின் இறப்பினால் நவீன்ராஜா பெரிதும் பாதிக்கப்பட்டார். இதனால் அவர், தந்தை சென்ற இடத்திற்கே சென்று விடலாம் போல் இருக்கிறது என தாயிடம் கூறி வந்துள்ளார். மகனின் இத்தகைய பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், அப்படியெல்லாம் பேசக்கூடாது. நீ வேலைக்கு சென்று நல்ல நிலைக்கு வர முயற்சி செய் என ஆறுதல் கூறி வந்துள்ளார்.

இதையடுத்து தனது காதலியை சந்தித்த நவீன்ராஜா, தனது குடும்பத்தின் நிலையை காதலியிடம் எடுத்து கூறி, நாம் இருவரும் பிரிந்து விடுவோம். நீ நல்ல பையனை பார்த்து திருமணம் செய்து கொள். நான் வேலைக்கு செல்ல முடிவு செய்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார். தான் காதலித்தவன் தன்னை திருமணம் செய்து கொள்வான். அவனுடன் சேர்ந்து மணவாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம் என்று மனதில் ஆயிரம் கனவுகளுடன் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த அந்த பெண்ணுக்கு இந்த முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

இதனால் உயிருடன் வாழ்வதைவிட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்த அந்த பெண், கடந்த 11-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து விட்டார். மயங்கி நிலையில் கிடந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தந்தை இறந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத நவீன்ராஜா, காதலியும் தற்கொலைக்கு முயன்றதால் மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளானார். இதனால் உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்த அவர், சம்பவத்தன்று நண்பரின் தங்கை திருமணத்திற்கு சென்று வருவதாக தாயிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், தஞ்சை ரெயில் நிலையத்திற்கும், கோவில்வெண்ணி ரெயில் நிலையத்திற்கும் இடையே ரெயில் தண்டவாளத்தின் அருகே நின்று கதறி அழுதார். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ரெயில் முன் நவீன்ராஜா பாய்ந்தார். இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

இதை பார்த்த அந்த பகுதி மக்கள் தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிதறி கிடந்த நவீன்ராஜாவின் உடல் பாகங்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நவீன்ராஜா உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து விஜயா கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை இறந்த மனவேதனை மற்றும் காதலி விஷம் குடித்ததால் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story