தோகைமலை அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல் - விவசாயி சாவு


தோகைமலை அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல் - விவசாயி சாவு
x
தினத்தந்தி 19 Jun 2019 4:30 AM IST (Updated: 19 Jun 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

தோகைமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தோகைமலை,

தோகைமலை அருகேயுள்ள தொண்டமாங்கிணம் ஊராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணியன்(வயது 27). வாளைக்கிணம் அருகே உள்ள கடன்வாங்கியூரை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (50). இருவரும் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் தோகைமலைக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர். சுப்ரமணியன் மோட்டார் சைக்கிளை ஓட்ட வெள்ளைச்சாமி பின்னால் அமர்ந்து இருந்தார்.

இவர்களுக்கு பின்னால் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையமலைபாளையம் பகுதியை சேர்ந்த மூவேந்திரன்(32) மற்றும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி முத்துசாமி (45) ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். தோகைமலை பாளையம் மெயின் சாலையில் உள்ள குண்டன்பூசாரியூர் அருகே அவர்கள் சென்றபோது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து 4 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துசாமி இறந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தோகைமலை போலீசில் சுப்ரமணியன் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story