ஆண்டிமடம் அருகே, 56 பவுன் நகைகளை கொள்ளையடித்த பெண் உள்பட 3 பேர் கைது
ஆண்டிமடம் அருகே 56 பவுன் நகைகளை கொள்ளையடித்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வரதராஜன்பேட்டை,
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள மேலநெடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 59). இவர் ஆண்டிமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணிபுரிந்து கடந்த ஆண்டு ஓய்வுபெற்று வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அதே ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 5 நாட்களாக திருவிழா நடைபெற்று வந்த நிலையில் மே 22-ந் தேதி கூழ்காய்த்து ஊற்றும் நிகழ்வு நடைபெற்றது. அதற்காக ராமச்சந்திரன் தன்னுடைய மனைவி இந்திரா மற்றும் மகள் கார்த்திகா ஆகியோரை முன்னரே அனுப்பிவிட்டு ராமச்சந்திரன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இரவு 7 மணியளவில் சாமிக்கு தீபாராதனை நடைபெறும் நேரத்தில் கார்த்திகா தந்தைக்கு போன் செய்து கோவிலுக்கு அழைத்துள்ளார். இதனால் வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றுவிட்டார். சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பூட்டை திறந்து பார்த்தபோது கதவின் உள்பக்கம் தாழ்ப்பாள்போடப்பட்டிருந்தது. பின்னர் பின்பக்க கதவு வழியாக சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் உள்ள இரும்பு பீரோ உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து பார்த்தபோது வீட்டின் மேல்பகுதியில் உள்ள ஓட்டை பிரித்து உள்ளே சென்ற மர்மநபர்களால் பீரோவில் இருந்த 56 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அடுத்த சில தினங்களில் நடைபெற இருந்த மகளின் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த நகை, பணம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது
இதனை அடுத்து ராமச்சந்திரன் ஆண்டிமடம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் போலீசாரின் விசாரணையில், ராமச்சந்திரன் வீட்டின் எதிர்புறம் வசிக்கும் வெளிநாட்டில் வேலை பார்க்கும் சுரேஷ் என்பவரின் மனைவி வசந்தி(29) திட்டமிட்டு தனக்குத் தெரிந்த இருவரின் துணையோடு கொள்ளையடித்தது தெரியவந்தது. வசந்தி அவருக்கு தெரிந்த ஈரோட்டை சேர்ந்த பூட்டு பழுது பார்க்கும் காஜா முகைதீன்(33). இவரது நண்பர் குனியமுத்தூரை சேர்ந்த சார்லஸ்அசோக்குமார்(56) ஆகியோரது துணையுடன் ராமச்சந்திரன் கோவிலுக்கு சென்றிருந்த நேரத்தில் 3 நாட்களாக திருட முடியாமல் கடைசி நாளன்று பணம்- நகையை திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வசந்தி, காஜாமுகைதீன், சார்லஸ் அசோக் குமார் ஆகிய 3 பேரையும் ஆண்டிமடம் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 18 பவுன் நகைகளை மீட்டனர்.
Related Tags :
Next Story