விருத்தாசலம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் பெண் போலீசின் கணவர் தீக்குளிக்க முயற்சி


விருத்தாசலம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் பெண் போலீசின் கணவர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 18 Jun 2019 11:30 PM GMT (Updated: 18 Jun 2019 8:33 PM GMT)

விருத்தாசலம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் பெண் போலீசின் கணவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்தவர் சற்குணன்(வயது 39). இவர் கரும்பு ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தமிழ்சுதா(32). இவர் நெய்வேலி போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே மீண்டும் இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சற்குணன், தனது மனைவி மீது விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதனிடையே சற்குணன் கரும்பு ஜூஸ் கடையில் இருந்த எந்திரங்கள் மற்றும் உபகரணங்களை விருத்தாசலம் போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த சற்குணன், கேனில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு சப்–கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர், கேன் மூடியை திறந்து பெட்ரோலை தன் மீது ஊற்றினார். பின்னர் தீப்பெட்டியை எடுத்தார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடிவந்து, தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த தீப்பெட்டி மற்றும் பெட்ரோல் கேனை பிடுங்கினர். பின்னர் அவர் மீது போலீசார் தண்ணீரை ஊற்றினர்.

இதையடுத்து சற்குணனை போலீசார் விசாரணைக்காக சப்–கலெக்டர் பிரசாந்திடம் அழைத்துச்சென்றனர். அப்போது சற்குணன் கூறுகையில், குடும்ப பிரச்சினை காரணமாக நானும், எனது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதால் தமிழ்சுதா மீது விருத்தாசலம் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் எனது மனைவியும் போலீஸ் என்பதால், எனது புகாரின்படி வழக்குப்பதிவு செய்யவில்லை. மாறாக எனது கரும்பு ஜூஸ் எந்திரத்தையும், உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்து விட்டனர். இதனால் எனது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. எனவே வேறு வழிதெரியாமல் தீக்குளிக்க முயன்றேன் என்றார்.

இதனை தொடர்ந்து சற்குணன், விசாரணைக்காக விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் சப்–கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story