வக்கீலை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்


வக்கீலை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 19 Jun 2019 4:30 AM IST (Updated: 19 Jun 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், வக்கீலை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், காதல் திருமணம் செய்த ஒரு ஜோடியிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார். அப்போது பெண் வீட்டார் தரப்பில் சீலப்பாடியை சேர்ந்த வக்கீல் தியாகு, போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது வக்கீல் தியாகுவுக்கும், இன்ஸ்பெக்டர் வசந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது இன்ஸ்பெக்டரை தாக்கியதாக வக்கீல் தியாகுவை வடக்கு போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். அதேபோல் இன்ஸ்பெக்டர் தன்னை தாக்கியதாக வக்கீலும் புகார் தெரிவித்தார். இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த வக்கீல்கள், தியாகுவுக்கு ஆதரவாக வடக்கு போலீஸ் நிலையம் முன்பு அண்ணா சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இன்ஸ்பெக்டர் வசந்தியிடம் முறையாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதையடுத்து வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னர் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதில் இன்ஸ்பெக்டர் வக்கீலை தகாத வார்த்தையில் பேசி தாக்கியதும், கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வசந்தி மீது தகாத வார்த்தையில் பேசுதல், கொலை முயற்சி, கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.

அதன்படி வடக்கு போலீசார் இன்ஸ்பெக்டர் வசந்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

Next Story