கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. இடைநீக்கம் காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை


கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. இடைநீக்கம் காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 19 Jun 2019 4:00 AM IST (Updated: 19 Jun 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி காங்கிரசில் இருந்து ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. நேற்று அதிரடியாக இடை நீக்கம் செய்யப்பட்டார்.

பெங்களூரு, 

கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி காங்கிரசில் இருந்து ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. நேற்று அதிரடியாக இடை நீக்கம் செய்யப்பட்டார்.

ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. விமர்சனம்

பெங்களூரு சிவாஜி நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரோஷன் பெய்க். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் மந்திரி சபையில் மந்திரியாக இருந்தார். தற்போதைய கூட்டணி ஆட்சியில் மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருந்த ரோஷன் பெய்க்கிற்கு ஏமாற்றமே கிடைத்தது. இதனால் அவர் அதிருப்தியில் இருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து ரோஷன் பெய்க், காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். தோல்விக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் தான் காரணம் என்று கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். இதனால் அவர் மீது காங்கிரஸ் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின.

கட்சியில் இருந்து இடைநீக்கம்

இதற்கிடையே, சிவாஜிநகரில் செயல்பட்டு வந்த பிரபல நகைக்கடையின் உரிமையாளர் மன்சூர்கான் பொதுமக்களிடம் வசூலித்த ரூ.1,230 கோடியை மோசடி செய்துவிட்டு தலைமறைவானார். மேலும் அவர் வெளியிட்ட ஆடியோவில், ‘ரோஷன் பெய்க் தன்னிடம் ரூ.400 கோடி வாங்கிவிட்டு திரும்ப கொடுக்கவில்லை. பணம் கேட்டால் மிரட்டல் விடுக்கிறார். இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று கூறப்பட்டு இருந்தது. மன்சூர்கானின் இந்த குற்றச்சாட்டை ரோஷன் பெய்க் முற்றிலுமாக மறுத்தார். மேலும் மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில், கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை காங்கிரஸ் கட்சி பிறப்பித்தது.

Next Story