சட்டசபையில் தாக்கல் செய்வதற்கு முன்பே நிதி மந்திரியின் டுவிட்டர் பக்கத்தில் பட்ஜெட் வெளியானதா? எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவாரின் டுவிட்டர் பக்கத்தில் பட்ஜெட் முன்கூட்டியே வெளியானதாக கூறி இரண்டு அவைகளிலும் எதிாக்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
மும்பை,
நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவாரின் டுவிட்டர் பக்கத்தில் பட்ஜெட் முன்கூட்டியே வெளியானதாக கூறி இரண்டு அவைகளிலும் எதிாக்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட் தாக்கல்
மராட்டிய அரசின் 2019-20-ம் ஆண்டுக்கான கூடுதல் பட்ஜெட்டை நேற்று நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் தாக்கல் செய்தார். அதே நேரத்தில் மேல்-சபையில் நிதித்துறை இணைமந்திரி தீபக் கேசர்கர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே தனது செல்போனில் பார்த்தபோது, நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் டுவிட்டர் பக்கத்தில் பட்ஜெட் தொடர்பான விவரங்கள் வெளியாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து இந்த பிரச்சினையை அவர் மேல்-சபையில் கிளப்பினார். பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு எப்படி டுவிட்டரில் வெளியிடலாம் என கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இந்த பிரச்சினை சட்டசபையிலும் பூதாகரமாக வெடித்தது.
இதை கண்டித்து 2 சபைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இதுகுறித்து தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
பதவி விலக வலியுறுத்தல்
இதற்கு முன்பு நாங்கள் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளோம். ஆனால் பட்ஜெட் உரை ஒருபோதும் முன்கூட்டி வெளியானதில்லை. ஆனால் தற்போது நாங்கள் படித்து பார்ப்பதற்கு முன்னதாகவே பட்ஜெட் உரை நிதி மந்திரியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது.
அப்படியானால் மந்திரியின் டுவிட்டரை நிர்வகிக்கும் குழுவுக்கு ஏற்கனவே பட்ஜெட் தகவல் தெரிந்துள்ளது. இதனால் பட்ஜெட் அவர்களுக்கு தான் முதலில் கசித்துள்ளது. இது சட்டமன்ற உறுப்பினர்களை அவமதிக்கும் செயலாகும். இதற்காக நிதிமந்திரி சுதீர் முங்கண்டிவார் மற்றும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இருவரும் மன்னிப்பு கோரவேண்டும்.
இவ்வாறு அஜித் பவார் கூறினார்.
இதேபோல மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே, நிதிமந்திரி சுதீர் முங்கண்டிவார் மற்றும் இணைமந்திரி தீபக் கேசர்கர் இருவரும் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தினார்.
Related Tags :
Next Story