திருபுவனை மின் அலுவலகத்தை கோபிகா எம்.எல்.ஏ. முற்றுகை; அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
திருபுவனை மின்துறை அலுவலகத்தை கோபிகா எம்.எல்.ஏ., தனது ஆதரவாளர்களுடன் சென்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருபுவனை,
திருபுவனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து 2 பெண்கள் பலியானார்கள். நேற்று காலை மலைச்சாமி என்பவர் மின்சாரம் தாக்கி இறந்துபோனார். ஒரே வாரத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் இறந்ததால் திருபுவனை பகுதி மக்களுக்கு மின்துறை மீது அதிருப்தி ஏற்பட்டது.
இந்த நிலையில் திருபுவனை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோபிகா தனது ஆதரவாளர்களுடன் திருபுவனையில் உள்ள மின் துறை அலுவலகத்துக்கு சென்றார்.
அப்போது தொகுதியில் உள்ள தெரு மின்விளக்குகள், மின்கம்பங்கள், மின்கம்பிகள் பழுது ஏற்பட்டுள்ளது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி உதவி பொறியாளர் பன்னீர்செல்வத்திடம் வாக்குவாதம் செய்தார். அப்போது எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களும் தங்கள் பகுதியில் உள்ள மின்துறை தொடர்பான குறைகளை சரமாரியாக தெரிவித்தனர்.
அதற்கு அங்கிருந்த உதவி பொறியாளர்கள், தங்களிடம் போதிய தளவாட பொருட்கள் இல்லாததால் குறைகளை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை என்றனர். உடனே கோபிகா எம்.எல்.ஏ., தன்னார்வலர்கள், தொழிற்சாலைகளில் இருந்து நிதி உதவி பெற்று மின்துறை தொடர்பான கோரிக்கைகளை சரிசெய்யுமாறு வலியுறுத்தினார்.
மேலும் தொகுதிக்கு உட்பட்ட 20 கிராமங்களில் உள்ள மின் பிரச்சினைகளை மனுவாக அதிகாரிகளிடம் அளித்தார். அதில், மின்கம்பங்களை மாற்றி அமைத்து மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்கவேண்டும், மின்கம்பிகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க மழைக்காலத்துக்கு முன்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும், தாழ்வாக செல்லும் மின்கம்பியை சரிசெய்யவேண்டும் என்று கூறினார்.
இந்த கோரிக்கைளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக மின்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து கோபிகா எம்.எல்.ஏ., தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் மின்துறை அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.