புதிய மின் இணைப்பு வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினீயர் கைது


புதிய மின் இணைப்பு வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2019 3:44 AM IST (Updated: 19 Jun 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

மறைமலை நகரில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலை நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மறைமலை நகர் பகுதியில் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரின் தொழிற்சாலையில் ஒரு குடோன் கட்டி அதனை வாடகைக்கு விட முடிவு செய்தார்.

இதனால் குடோனுக்கு மின் இணைப்பு வேண்டி மறைமலை நகர் மின்வாரிய உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் மனு செய்தார். அங்கிருந்த உதவி மின்பொறியாளர் சிவராஜன் (வயது 53) என்பவர் புது இணைப்பு தருவதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பம் இல்லாத வெங்கடேசன் இது குறித்து காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் செய்தார்.

இதனையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வெங்கடேசனிடம் கொடுத்து அனுப்பினர். நேற்று மாலை மறைமலை நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற வெங்கடேசன் அந்த பணத்தை என்ஜினீயர் சிவராஜனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சிவபாதசேகரன், இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் சிவராஜனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டில் உள்ள சிவராஜனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர்.

கைதான என்ஜினீயர் சிவராஜன் கடந்த 2½ ஆண்டுகளாக மறைமலை நகரில் பணியாற்றி வந்துள்ளார்.

Next Story