மும்பை பெண்ணை கற்பழித்ததாக கேரள கம்யூனிஸ்டு தலைவர் மகன் மீது வழக்குப்பதிவு
மும்பை பெண்ணை கற்பழித்ததாக கேரள கம்யூனிஸ்டு தலைவர் மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மும்பை,
மும்பை பெண்ணை கற்பழித்ததாக கேரள கம்யூனிஸ்டு தலைவர் மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கம்யூனிஸ்டு தலைவர் மகன்
மும்பையை சேர்ந்த 33 வயது பெண் கடந்த 2009-ம் ஆண்டு துபாயில் உள்ள டான்ஸ் பாரில் வேலை பார்த்தார். அப்போது அந்த பெண்ணுக்கு கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் பினாய் பாலகிருஷ்ணனின் அறிமுகம் கிடைத்தது. பினாய் பாலகிருஷ்ணன் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் ஆவார்.
இந்தநிலையில் டான்ஸ் பாரில் வேலை பார்த்த பெண் பினாய் பாலகிருஷ்ணன் மீது மும்பை வெர்சோவா போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
பெண் கற்பழிப்பு
நான் கடந்த 2009-ம் ஆண்டு டான்ஸ் பாரில் வேலை செய்ய நண்பர் ஒருவர் மூலமாக துபாய் சென்றேன். அங்கு வைத்து பினாய் பாலகிருஷ்ணன் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் டான்ஸ் பாரில் பண மழையில் என்னை நனைய வைப்பார். இதையடுத்து நாங்கள் நெருங்கிய நண்பர்கள் ஆனோம். அப்போது அவர் எனக்கு விலை உயர்ந்த பொருட்களை அன்பளிப்பாக அளித்தார். இந்தநிலையில் ஒருநாள் என்னை காதலிப்பதாகவும், டான்ஸ் பாரில் வேலை செய்யவேண்டாம் எனவும் கூறினார்.
பின்னர் துபாயில் உள்ள அவரது வீட்டுக்கு என்னை அழைத்து சென்று திருமணம் செய்வதாக கூறி கற்பழித்தார்.
ஆண் குழந்தை பிறந்தது
இதையடுத்து மும்பையில் வீடு எடுத்து என்னை தங்க வைத்தார். 2010-ம் ஆண்டு எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. நான் திருமணத்துக்கு வற்புறுத்திய போது எல்லாம் அவர் பல்வேறு காரணங்களை கூறி தட்டி கழித்து வந்தார். சமீபத்தில் அவரது பேஸ்புக் கணக்கை பார்த்தபோது, பினாய் பாலகிருஷ்ணனுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் அந்த புகாரில் கூறியுள்ளார்.
இந்த புகார் குறித்து போலீசார் பினாய் பாலகிருஷ்ணன் மீது கற்பழிப்பு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story