தர்மபுரி எஸ்.வி. சாலையில் விரிவாக்கப்பணி, ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள அறிவுறுத்தல்
தர்மபுரி எஸ்.வி. சாலை ரூ.1.90 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி அந்த பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்கள் அகற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தர்மபுரி,
தர்மபுரி கடைவீதியின் தொடர்ச்சியாக அமைந்துள்ள எஸ்.வி. சாலை தர்மபுரி நகரில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றாகும். இந்த சாலையையொட்டி சார்பதிவாளர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் அமைந்து உள்ளன. இதேபோல் தனியார் பள்ளிகள், திருமண மண்டபங்கள், கடைகள் அதிக அளவில் அமைந்துள்ளன.
இந்த சாலையில் தினமும் அதிக பொதுமக்கள் நடமாட்டமும், வாகனங்கள் போக்குவரத்தும் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. இந்தநிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்த சாலையில் ரூ.1.90 கோடி மதிப்பில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் முதல்கட்ட பணிகள் நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
காந்தி சிலை அருகில் இருந்து அன்னசாகரம் பிரிவு சாலை வழியாக சேலம் சாலையுடன் இணையும் வழித்தடத்தில் தெற்கே சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 7 மீட்டர் அகலம் கொண்ட இந்த சாலை 14 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இதில் அன்னசாகரம் பிரிவு சாலை இணையும் இடத்தில் ஒரு தரைபாலமும், சாலையின் கிழக்கு பகுதியில் கழிவுநீர் செல்ல கால்வாயும் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த சாலையையொட்டி உள்ள பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு வாரத்திற்குள் அகற்றி கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story