இளம்பெண் தற்கொலை, தோழியின் கணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை - கிரு‌‌ஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு


இளம்பெண் தற்கொலை, தோழியின் கணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை - கிரு‌‌ஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 18 Jun 2019 9:45 PM GMT (Updated: 18 Jun 2019 11:36 PM GMT)

கிரு‌‌ஷ்ணகிரி அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில், தோழியின் கணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிரு‌‌ஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரியை அடுத்த மகராஜகடை அருகே உள்ள நலகொண்டலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 33). விவசாயி. இவருக்கும், இவரது மனைவி ராதா(27) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது ராதாவை அவரது கணவர் சங்கர் அடிக்க துரத்தினார். இதனால் பயந்து போன ராதா, அதே பகுதியில் உள்ள தனது தோழியான காயத்திரி(23) என்பவரது வீட்டிற்குள் நுழைந்து மறைந்து கொண்டார்.

இதையடுத்து அங்கு வந்த சங்கர், தனது மனைவி ராதா இங்கு வந்தாரா? என காயத்திரியிடம் கேட்டார். அப்போது ராதா இங்கு வரவில்லை என்று காயத்திரி கூறினார். இதை நம்பாத சங்கர், காயத்திரி வீட்டிற்குள் நுழைந்து, தனது மனைவியை தேடினார். அப்போது அங்கு மறைந்திருந்த ராதாவை வெளியே இழுத்து வந்த சங்கர், காயத்திரியை தனது கையால் அடித்து, ஆபாசமாக திட்டினார்.

இதனால் மனஉளைச்சல் அடைந்த இளம்பெண் காயத்திரி அன்றே தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிரு‌‌ஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.

அந்த தீர்ப்பில் மனைவியின் தோழியை தற்கொலைக்கு தூண்டிய காரணத்திற்காக விவசாயி சங்கருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தாக்கி, ஆபாசமாக திட்டியதற்காக 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இந்த தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜராகி வாதாடினார்.

Next Story