குடியாத்தம் ரெயில் நிலையத்தில், ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் 7 பவுன் நகை பறிப்பு - மர்ம நபர் கைவரிசை
குடியாத்தம் ரெயில் நிலையத்தில் சிக்னலுக்காக மெதுவாக சென்ற ரெயிலில் பெண் பயணியிடம் 7 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார்.
ஜோலார்பேட்டை,
சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் ஈஸ்ட் அவன்யூவை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி அனிதா (வயது 50). இந்த நிலையில் கடந்த வாரம் பொள்ளாச்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு குணசேகரன் தனது குடும்பத்துடன் சென்றார். பின்னர் மீண்டும் சென்னை செல்வதற்காக கடந்த 16-ந் தேதி கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து சென்னை வரை செல்லும் பழனி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட எஸ்.3 பெட்டியில் இருக்கை எண் 65-ல் ஜன்னல் ஓரமாக அனிதா பயணம் மேற்கொண்டார்.
அந்த ரெயில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரெயில் நிலையம் அருகில் சிக்னலுக்காக நள்ளிரவு மெதுவாக சென்ற போது, மர்ம நபர் ஒருவர் வெளியில் இருந்து ஜன்னல் வழியாக கையை விட்டு அனிதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அனிதா சென்னை சென்டிரல் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்குள் வருவதால், அந்த புகாரை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு மாற்றம் செய்தனர். அதன்பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story