ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் வியாபாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்


ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் வியாபாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 20 Jun 2019 4:15 AM IST (Updated: 19 Jun 2019 9:18 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வியாபாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்,

தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சியில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியனுக்கு புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து அவருடைய உத்தரவின்பேரில் நேற்று அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

2-வது மண்டலத்துக்கு உட்பட்ட சுண்ணாம்புக்கார தெரு, ரொட்டிக்கார தெரு, மண்டித்தெரு பகுதிகளில் சுகாதார அலுவலர் சிவக்குமாா், சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் என 10-க்கும் மேற்பட்டவர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மொத்த விற்பனை கடை ஒன்றில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 1 டன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் அதை விற்பனைக்காக வைத்திருந்த வியாபாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து 2-வது முறை பிடிபட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story