செங்கம் அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த 4 கல்வெட்டுகள் கண்டெடுப்பு
செங்கம் அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த 4 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன், நிர்வாகி சுதாகர் மற்றும் குழுவினருக்கு செங்கம் தாலுகா பனை ஓலைப்பாடி கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் கல்வெட்டுகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலமுருகன் குழுவினர் அக்கிராமத்துக்கு சென்று, கோவிலில் உள்ள 3 கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர்.
கோவிலில் கிடைத்த கல்வெட்டுகள் புனரமைப்பின் போது இடம்மாற்றி கட்டியதாலும், கற்களை பிரித்து வைத்ததாலும், சில கல்வெட்டுகள் காலப்போக்கில் அழிந்ததாலும் கல்வெட்டுகளின் தகவல்களை முழுமையாக அறியமுடியவில்லை. எனினும் அதில் கோவிலுக்கு தானம் அளிக்கப்பட்ட செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கல்வெட்டு ஆய்வு குழுவினர் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த கிராமத்தின் கிழக்குப்பகுதியில் சிறிது தூரத்தில் ஒரு பலகை கல்வெட்டு ஒன்று கிடைக்கப்பெற்றது. அந்த பலகை கல்வெட்டு இருபுறமும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அந்த கல்வெட்டை ஆய்வு செய்த குழுவினர் கூறியதாவது:-
கண்டுபிடிக்கப்பட்ட இந்த 4 கல்வெட்டுகளும் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர மன்னன் வேங்கடபதி தேவமகாராயரின் காலத்தில் வெட்டப்பட்டது. செய்யாற்றின் வடகரையில் இரட்டை ஏந்தல் என்ற விஜயராயபுரம் எனும் பெயர் பெற்ற கிராமத்தில் உள்ள நிலத்தை நரசப்ப நாயக்கர் என்பவரின் வம்சாவழியான வீரப்பநாயக்கர் குறுநில மன்னன் பெயரில் நல்லார், மெய்போகராயர், அருணகிரி அண்ணாமலை ஆகிய மூவரும் சேர்ந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு தாமிரபட்டயமாக தாரைவார்த்து கொடுத்ததாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டின் இடைப்பகுதியில் சூரியன், சந்திரன், திருவண்ணாமலை மலையும், தானம் அளித்தவரின் உருவமும் பொறிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை கோவிலுக்கு அக்காலத்தில் பலர் நிலம் தானம் அளித்துள்ளனர். அதுகுறித்து கல்வெட்டுகள் தொடர்ந்து இப்பகுதியில் கிடைத்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story