பரமத்திவேலூர் ஏல சந்தையில் வெற்றிலை விலை உயர்வு
பரமத்திவேலூர் ஏல சந்தையில் வெற்றிலை விலை உயர்ந்து உள்ளது.
பரமத்திவேலூர்,
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப் பட்டுள்ளது.
இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப் படுகிறது.
கடந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை (இளம்பயிர் மார்) 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை (இளம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை (முதியம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை (முதியம்பயிர் மார்) ரூ.1,500-க்கும் ஏலம் போனது.
நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை (இளம்பயிர் மார்) 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை (இளம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை (முதியம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை (முதியம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்துக்கும் ஏலம் போனது. தற்போது வரத்து குறைவின் காரணமாக வெற்றிலையின் விலை உயர்ந்து உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story