மாவட்டத்தில் 1,043 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் சீரமைப்பு கலெக்டர் ரோகிணி தகவல்


மாவட்டத்தில் 1,043 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் சீரமைப்பு கலெக்டர் ரோகிணி தகவல்
x
தினத்தந்தி 20 Jun 2019 4:45 AM IST (Updated: 19 Jun 2019 10:29 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 1,043 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் சீரமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

சேலம், 

சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் நவீன முறையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை நேற்று கலெக்டர் ரோகிணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் பல்வேறு வகைகளில் நீர் சேமிப்புக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த முயற்சிகளில் ஒரு முன்னோடி முயற்சியாக குறைந்த செலவில் எளிமையான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்தி, எளிய முறையில் மிகச்சிறப்பான தொழில்நுட்பத்தை கொண்டு ரூ.4 ஆயிரத்துக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்கலாம் என்று பொதுமக்களிடம் எடுத்து கூறப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் இதுவரை 1,043 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைத்து உருவாக்கப் பட்டுள்ளது.

ஒவ்வொரு 500 சதுரஅடி கான்கிரீட் வீடு உள்ள பகுதிகளில் குறைந்த செலவில் நவீன முறையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினை உருவாக்கினால் இயல்பான மழைக்கு கூட சுமார் 45 ஆயிரம் லிட்டர் மழைநீரை சேகரிக்கலாம். இந்த மழைநீர் ஒரு குடும்பத்திற்கு மூன்று மாதத்திற்கு தேவையான தண்ணீர் தேவையினை பூர்த்தி செய்ய முடியும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் சரிசெய்யப்பட்டு இத்தகைய நவீன முறையிலான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்கப்படும். மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பொதுப்பணித்துறை மேட்டூர் மற்றும் சரபங்கா ஆகிய பிரிவுகளின் மூலம் மொத்தம் ரூ.13 கோடி மதிப்பீட்டில் 79 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு 76 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் 20 குடிமராமத்து பணிகள் ரூ.5.62 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.

சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டியில் கடந்த 15-ந் தேதி பெய்த மழையின் போது 6 ஆயிரம் லிட்டர் மழைநீர் சேகரிப்பட்டுள்ளது. மழைநீர் சேமிப்பில் தமிழகத்திலேயே முதன்மை மாவட்டமாக சேலம் மாவட்டத்தை உருவாக்கிட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சடையப்பன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story