சேலம் எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கை ரூ.20¼ கோடியில் பசுமை தளமாக மாற்றி அமைக்கும் பணி மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆய்வு


சேலம் எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கை ரூ.20¼ கோடியில் பசுமை தளமாக மாற்றி அமைக்கும் பணி மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆய்வு
x
தினத்தந்தி 20 Jun 2019 4:15 AM IST (Updated: 19 Jun 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

சேலம் எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கை ரூ.20¼ கோடியில் நவீன முறையில் பசுமை தளமாக மாற்றிஅமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆய்வு செய்தார்.

சேலம், 

சேலத்தில் கடந்த 75 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கில் 2011-ம் ஆண்டு முதல் திடக்கழிவுகள் கொட்டுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார காரணங்களை கருத்தில் கொண்டு அந்த திடக்கழிவு கிடங்கினை பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாற்றியமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இந்தநிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.20 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் நவீன விஞ்ஞான முறையில் சுகாதாரமான பசுமை தளமாக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை நேற்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து ஆணையாளர் சதீஷ் கூறியதாவது:-

எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கு பகுதியில் 19.33 ஏக்கரில் உள்ள திடக்கழிவுகளை 6.70 ஏக்கர் பரப்பிற்கு மாற்றியமைக்கப்பட்டு விஞ்ஞான முறையில் மூடப்பட்டு வருகிறது. அவ்வாறு மூடிய 6.70 ஏக்கர் நிலப்பரப்பு 3 தளங்களாக பிரிக்கப்படுகிறது.

இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புல் தளங்களுடன் கூடிய திறந்தவெளி பூங்கா, விளையாட்டு மைதானங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், நடைமேடை மற்றும் மிதிவண்டி ஓட்டும் தளம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் விரைவில் மேற்மொள்ளப்பட உள்ளன.

தற்போது தரைமட்டத்தில் இருந்து 10 மீட்டர் உயரத்திற்கு உபயோகமற்ற பழைய திடக்கழிவுகள் சமன்படுத்தப்பட்டு அந்த கழிவுகள் சரியாத வகையில் பாதுகாப்பு வலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக 11 மீட்டர் உயரத்திற்கு பழைய திடக்கழிவுகளை சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் உரிய காலத்திற்குள் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். மீதமுள்ள 12.63 ஏக்கர் நிலப்பரப்பினை மாநகராட்சியின் இதர பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது மாநகர பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் சிபிசக்கரவர்த்தி, முத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story