தேனி அருகே மினிபஸ் மோதி மின்கம்பம் முறிந்தது மின்தடையால் பெரும் விபத்து தவிர்ப்பு


தேனி அருகே மினிபஸ் மோதி மின்கம்பம் முறிந்தது மின்தடையால் பெரும் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 20 Jun 2019 3:45 AM IST (Updated: 19 Jun 2019 10:52 PM IST)
t-max-icont-min-icon

தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் அசுர வேகத்தில் வந்த மினிபஸ் மோதியதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. அப்போது மின்தடை ஏற்பட்டு இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தேனி,

தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆர்.எம்.டி.சி. காலனி செல்லும் சாலையில் கடைகள், வீடுகள், பள்ளிக்கூடம் போன்றவை உள்ளன. ஆட்கள் நடமாட்டம் மிகுந்த இந்த சாலையில் மினிபஸ்கள் இயக்கப்படுகின்றன. மினிபஸ்களில் ஆட்களை ஏற்றுவதில் போட்டி போட்டுக் கொள்வதும், அசுர வேகத்தில் மினிபஸ்களை இயக்குவதும் தொடர்கதையாக உள்ளது.

இங்கு மினிபஸ்களின் வேகத்தை குறைக்க வேண்டும் என்றும், போதிய அளவில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஆர்.எம்.டி.சி. காலனியில் இருந்து ஆட்களை ஏற்றிக் கொண்டு ஒரு மினிபஸ் நேற்று தேனி நோக்கி வந்தது. இந்த மினிபஸ் பழனிசெட்டிபட்டி பஸ் நிறுத்தத்துக்கு முன்பாக அசுர வேகத்தில் வந்தபோது, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

மோதிய வேகத்தில் மின்கம்பம் முறிந்து மினிபஸ் மீதே விழுந்தது. மின்கம்பிகள் அறுந்து மினிபஸ் மீதும், சாலையிலும் விழுந்தது. கடைகள், வீடுகளுக்கு செல்லும் மின்இணைப்பு கம்பிகளும் அறுந்து விழுந்தன. மினிபஸ்சில் வந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

தேனி துணை மின் நிலையத்தில் நேற்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், தேனி, பழனிசெட்டிபட்டி பகுதிகளுக்கு மின்தடை செய்யப்பட்டு இருந்தது. மின்தடை என்பதால் மின்கம்பிகள் அறுந்து விழுந்த போது பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அங்கு மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்தனர். முறிந்து விழுந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, அங்கு புதிய மின்கம்பத்தை நட்டனர். பின்னர், கடைகள், வீடுகளுக்கு துண்டிக்கப்பட்ட மின்இணைப்புகளை மீண்டும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனவே, இங்கு மினிபஸ் மற்றும் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story