காங்கிரசில் இருந்து இடைநீக்கம்: உண்மையை சொன்னதால் எனக்கு தண்டனை ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி


காங்கிரசில் இருந்து இடைநீக்கம்: உண்மையை சொன்னதால் எனக்கு தண்டனை ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 20 Jun 2019 3:30 AM IST (Updated: 19 Jun 2019 11:01 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரசில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், உண்மையை சொன்னதால் எனக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. கூறினார்.

பெங்களூரு,

காங்கிரசில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், உண்மையை சொன்னதால் எனக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. கூறினார்.

ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. இடைநீக்கம்

மந்திரி பதவி கிடைக்காததால் கடும் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ., முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுேகாபால், மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோரை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தார். இதுகுறித்து விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. அதற்கு அவர் விளக்கம் அளிக்கவில்லை.

இந்த நிலையில் ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ.ைவ இடைநீக்கம் செய்து கர்நாடக காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கட்சிக்காக உழைத்துள்ளேன்

நான் உண்மையை சொன்னேன். அது தவறா?. கட்சியில் தவறு செய்தவர்களுக்கு எதிராக பேசினேன். நான் காங்கிரஸ் கட்சியின் ஒழுக்கமான தொண்டன். கட்சிக்காக உழைத்துள்ளேன். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக நான் பேசவில்லை.

கட்சியின் மாநில தலைவர்களுக்கு எதிராக பேசியதால் என்னை இடைநீக்கம் செய்துள்ளனர். இது சரியல்ல. துமகூருவில் முத்தஹனுமேகவுடாவுக்கு டிக்கெட் வழங்காமல் தேவேகவுடாவுக்கு ஒதுக்கினர். அங்கு தேவேகவுடாவையும் திட்டமிட்டு தோற்கடித்தனர்.

எனக்கு தண்டனை

கோலாரில் கே.எச்.முனியப்பாவை தோல்வி அடைய செய்தனர். அவருக்கு எதிராக பேசியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்ட சுமலதாவுக்கு ஆதரவாக அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் பணியாற்றினர். அவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

காங்கிரஸ் தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?. உண்மையை சொன்னதால் எனக்கு தண்டனை வழங்கியுள்ளனர். ரமேஷ் ஜார்கிகோளி கட்சிக்கு எதிராக செயல்படவில்லையா?. அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் உப்பு தின்னவில்லையா?. அவர்கள் நீர் குடிப்பது எப்போது?. நான் மட்டும் நீர் குடிக்க வேண்டுமா?.

பா.ஜனதாவுக்கு அதிக வாக்குகள்

நாடாளுமன்ற தேர்தலில் எனது தொகுதியான சிவாஜிநகரில் காங்கிரசுக்கு அதிக ஓட்டுகள் விழுந்தன. சித்தராமையா மற்றும் தினேஷ் குண்டுராவ் தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?. கட்சியின் தோல்விக்கு காரணம் என்ன என்பதை நான் சொன்னேன். அதுகுறித்து ஆராய்வதை விட்டுவிட்டு, என் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். நான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். சித்தராமையா காங்கிரசின் உறுப்பினர் கிடையாது.

விரைவில் முடிவு

என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, கே.எச்.முனியப்பா, ராமலிங்கரெட்டி ஆகியோருடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பேன். டெல்லிக்கு சென்று ஆலோசனை நடத்த வேண்டுமா? என்பது குறித்து விரைவில் முடிவு எடுப்பேன்.

இவ்வாறு ரோஷன் பெய்க் கூறினார்.

பெங்களூரு நகைக்கடை மோசடியில் ரோஷன் பெய்க்கின் பெயரும் அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story