பெண்ணாக பிறந்ததால் ஆத்திரம்: பச்சிளம் குழந்தை கழுத்தை நெரித்து கொலை வெறிச்செயலில் ஈடுபட்ட தந்தை கைது


பெண்ணாக பிறந்ததால் ஆத்திரம்: பச்சிளம் குழந்தை கழுத்தை நெரித்து கொலை வெறிச்செயலில் ஈடுபட்ட தந்தை கைது
x
தினத்தந்தி 20 Jun 2019 4:00 AM IST (Updated: 19 Jun 2019 11:11 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணாக பிறந்ததால் ஆத்திரத்தில் பச்சிளம் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து வெறிச்செயலில் ஈடுபட்ட தந்தையை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு, 

பெண்ணாக பிறந்ததால் ஆத்திரத்தில் பச்சிளம் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து வெறிச்செயலில் ஈடுபட்ட தந்தையை போலீசார் கைது செய்தனர்.

பெண் குழந்தை

சிக்கமகளூரு அருகே புச்சனஹள்ளியை சேர்ந்தவர் மஞ்சு. இவரது மனைவி சுசித்ரா. இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சுசித்ரா கர்ப்பம் அடைந்தார்.

இந்நிலையில் மஞ்சு தனது மனைவி சுசித்ரா மற்றும் குடும்பத்தினரிடம் தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று கூறி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுசித்ராவுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

கழுத்தை நெரித்து கொலை

தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்த மஞ்சுவுக்கு, பெண் குழந்தை பிறந்தது ஏமாற்றத்தை அளித்தது. இதனால் அவர் தனது வீட்டில் உள்ள யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் மஞ்சு, ஒரு ஜோதிடரிடம் சென்று ஜோசியம் பார்த்து உள்ளார். அப்போது பெண் குழந்தையால் வீட்டிற்கு கெடுதல் நடக்க போகிறது என்று மஞ்சுவிடம், ஜோதிடர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சு குழந்தையை கொல்ல முடிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை தொட்டிலில் தூங்கி கொண்டு இருந்தது. அப்போது வீட்டில் இருந்த மஞ்சு, குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுசித்ரா கதறி அழுதார். அவரின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் மஞ்சு தப்பி ஓடிவிட்டார்.

கைது- பரபரப்பு

இதுபற்றி அறிந்த சிக்கமகளூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது பெண்ணாக பிறந்ததால் குழந்தையை மஞ்சு கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து சுசித்ரா அளித்த புகாரின்பேரில் சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த மஞ்சுவை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாக பிறந்ததால் குழந்தையை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் சிக்கமகளூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story