வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி பட்டதாரியிடம் ரூ.2¾ லட்சம் மோசடி


வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி பட்டதாரியிடம் ரூ.2¾ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 20 Jun 2019 4:30 AM IST (Updated: 19 Jun 2019 11:15 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி பட்டதாரி வாலிபரிடம் ரூ.2¾ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம், 

கன்னியாகுமரி மாவட்டம் சாரல்கோட்டவிளை பகுதியை சேர்ந்தவர் பாபுநிர்மல் பிரசாத் மகன் நிர்மல்பிரேம் (வயது 21). பட்டதாரியான இவர் வேலைக்கு செல்வதற்காக தனது தெரிந்த நண்பர்கள் சிலரிடம் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் நிர்மல்பிரேம், தனக்கு தெரிந்த ஒருவரின் மூலமாக சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்வதற்காக விழுப்புரம் வி.மருதூர் சந்தானகோபாலபுரம் சாலையில் இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தை அணுகினார். அப்போது அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த பிரதீபன், ரகுராம் ஆகிய இருவரும், நிர்மல்பிரேமிடம் சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாகவும், அதற்கு பணம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.

இதை நம்பிய நிர்மல்பிரேம், சிங்கப்பூர் செல்வதற்கு எவ்வளவு பணம் செலவாகும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இருவரும் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் செலவாகும் என்று கூறவே அந்த பணத்தை அவர்களிடம் நிர்மல்பிரேம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற அவர்கள் இருவரும், நிர்மல்பிரேமுக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கித் தரவில்லை. உடனே அவர்களை நிர்மல்பிரேம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியும் எந்த பதிலும் இல்லை.

இதையடுத்து நிர்மல்பிரேம், கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வி.மருதூருக்கு வந்துள்ளார். அப்போது அங்கு அந்த தனியார் நிறுவனம் பூட்டிக்கிடந்தது. அக்கம், பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது அந்த நிறுவனம் பல மாதங்களாக பூட்டியே கிடப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்பிறகு தான், தன்னை சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பிரதீபன், ரகுராம் ஆகிய இருவரும் பணத்தை மோசடி செய்திருப்பது நிர்மல்பிரேமுக்கு தெரியவந்தது.

பணத்தை பறிகொடுத்த நிர்மல்பிரேம், இதுபற்றி விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரதீபன், ரகுராம் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story