பென்னாகரத்தில் தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் வாங்கிய 2 பெண் அதிகாரிகள் கைது


பென்னாகரத்தில் தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் வாங்கிய 2 பெண் அதிகாரிகள் கைது
x
தினத்தந்தி 20 Jun 2019 4:30 AM IST (Updated: 19 Jun 2019 11:47 PM IST)
t-max-icont-min-icon

தாலிக்கு தங்கம், நிதி உதவி வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 பெண் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பென்னாகரம், 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகாவிற்கு உட்பட்ட கரியப்பனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகள் சாந்தாமணி. இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சாந்தாமணிக்கு திருமண நிதி உதவி பெற பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூக நலத்துறை அலுவலர்களிடம் அவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

திருமணம் முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி அவருக்கு கிடைக்கவில்லை. இதனைத்தொடர்ந்து சின்னசாமி, இவருடைய மனைவி ரங்கம்மாள் ஆகியோர் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பலமுறை சென்று சமூகநலத்துறை அதிகாரியிடம் கேட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள், ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர விரும்பாத சின்னசாமியின் மகன் செல்வகுமார் இதுகுறித்து தர்மபுரி லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.4 ஆயிரத்தை செல்வகுமாரிடம் கொடுத்து அனுப்பினர்.

பின்னர் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மறைந்து இருந்தனர். பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்ற செல்வகுமார் அங்கிருந்த சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சாந்தா மற்றும் ஊரக நல அலுவலர் (மகளிர்) சரோஜா ஆகியோரிடம் ரூ.4 ஆயிரத்தை கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையிலான போலீசார் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சாந்தா மற்றும் ஊரக நல அலுவலர் (மகளிர்) சரோஜா ஆகிய 2 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரசாயன பவுடர் தடவிய ரூ.4 ஆயிரத்தையும் பறிமுதல் செய்து 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

Next Story