அரசு பள்ளி அருகில் கொட்டப்படும் கழிவுகளால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி


அரசு பள்ளி அருகில் கொட்டப்படும் கழிவுகளால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 20 Jun 2019 4:15 AM IST (Updated: 20 Jun 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

கொத்தமங்கலம் அரசு பள்ளி அருகில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் மாணவர்கள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் கொத்தமங்கலம் உள்ளது. இங்கு பல திருமண மண்டபங்களும் உள்ளது. கிராமத்தில் உள்ள கழிவுகள், குப்பைகள் மற்றும் மண்டபங்களில் விழாக்காலங்களில் கொட்டப்படும் இலை மற்றும் குடிதண்ணீர் பாட்டில்கள், சாக்கு பைகள் போன்ற பிளாஸ்டிக் கழிவுகள் அத்தனையும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரிக்க கிராமத்தின் பல இடங்களிலும் உரக்குழிகள் இருந்தாலும் வாடிமாநகர் கடைவீதி மற்றும் மண்டபங்களின் கழிவுகளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி மாணவர் விடுதி, கால்நடை மருந்தகம் அமைந்துள்ள பகுதியில் கொட்டப்படுகிறது.

இதனால் துர்நாற்றம் அதிகமாக காற்றில் பரவி மாணவர்கள் வகுப்புகளிலும் விடுதியிலும் இருக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கால்நடை மருந்தகத்தில் மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள், கால்நடைகளை சிகிச்சைக்கு கொண்டு வரும் விவசாயிகள், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் என அனைவரும் மூக்கை பிடித்து கொண்டே செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

சுத்தம் செய்ய தயாராகும் இளைஞர்கள்

இதுகுறித்து கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினர் கூறுகையில், கிராமத்தில் பல இடங்களில் உரக்குழிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பள்ளி, விடுதி, கால்நடை மருந்தகம் அருகே ஊராட்சி நிர்வாகமே குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் அதிகமாக உள்ளது. மேலும் மண்டபங்களில் இருந்து கொண்டு வந்து கொட்டப்படும் எச்சில் இலை கழிவுகளில் மாமிச துண்டுகள், எலும்புகள் கிடப்பதால் அந்த குப்பை சேர்ந்துள்ள இடத்தில் நாய்களும் அதிகமாக குவிந்துவிட்டது.

இதனால் அந்த வழியாக செல்வோரையும் இலைகளை மேய வரும் கால்நடைகளையும் நாய்கள் கடிக்கிறது. மேலும் இலைகளை தின்னும் கால்நடைகள் அதில் சேர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளையும் தின்றுவிடுவதால் கால்நடைகளுக்கு ஆபத்தும் ஏற்படுகிறது. அதனால் ஊராட்சி நிர்வாகம் ஒரு வாரத்தில் அந்த கழிவுகளை அகற்ற வேண்டும். இல்லை என்றால் கொத்தமங்கலம் இளைஞர் மன்றம் சார்பில், குப்பை கழிவுகளை அகற்ற திட்டமிட்டு ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் கொடுத்துவிட்டோம். தகவல் கொடுத்து 3 நாட்களாகியும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் சில நாட்களில் இளைஞர்கள் குப்பையை சுத்தம் செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறினர். 

Next Story