கூடலூர் 2-ம் மைல் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் மாணவ-மாணவிகள் அவதி; வடிகால் அமைக்கப்படுமா? பெற்றோர் எதிர்பார்ப்பு


கூடலூர் 2-ம் மைல் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் மாணவ-மாணவிகள் அவதி; வடிகால் அமைக்கப்படுமா? பெற்றோர் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 20 Jun 2019 4:00 AM IST (Updated: 20 Jun 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் 2-ம் மைல் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அங்கு மழைநீர் வடிகால் அமைக்கப்படுமா? என்று பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் 2-ம் மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 200 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பழமையான கட்டிடத்தில் வகுப்புகள் செயல்பட்டு வந்தது. இதனால் மழைக்காலத்தில் வகுப்பறைக்குள் தண்ணீர் வழிந்தோடியது. இதன் காரணமாக மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். எனவே பழமையான பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி கட்டிடம் சீரமைக்கப்பட்டது. மேலும் மேற்கூரைகள் மாற்றப்பட்டு இரும்பு தகடுகள் கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தகடுகளில் மழைநீர் விழுந்து பலத்த சத்தம் எழுகிறது. இதனால் வகுப்பறையில் அமர்ந்து மாணவ-மாணவிகளால் சரியாக படிக்க முடியவில்லை. மேலும் ஆசிரியர்கள் விளக்கும் பாடங்களை கவனமாக கேட்க முடியவில்லை.

இதற்கிடையில் பள்ளி வளாகத்தை சுற்றிலும் மதிற்சுவர்கள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் மழை பெய்யும் போது பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் சேறும், சகதியுமாக பள்ளி வளாகம் மாறி விடுகிறது. இதனால் மாணவ- மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். சில சமயங்களில் பலர் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர்.

எனவே மழைநீர் வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என்று பெற்றோர் பலமுறை சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழையால் பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரில் மாணவ-மாணவிகள் நடந்து செல்லும் அவல நிலையை காண முடிகிறது. எனவே இனிமேலாவது சம்பந்தப்பட்ட துறையினர் பள்ளி வளாகத்தில் மழைநீர் வடிகால் வசதி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? என்று பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர்.

Next Story