கரிக்கையூரில் பழங்கால பாறை ஓவியங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு


கரிக்கையூரில் பழங்கால பாறை ஓவியங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு
x
தினத்தந்தி 19 Jun 2019 11:00 PM GMT (Updated: 19 Jun 2019 9:00 PM GMT)

கரிக்கையூரில் பழங்கால பாறை ஓவியங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட சோலூர்மட்டம் அருகே கரிக்கையூர் கிராமம் அமைந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்த கிராமத்தில் ஏராளமான ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து வனப்பகுதி வழியாக 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றால், அங்கு சுமார் 300 மீட்டர் நீளம் மற்றும் 120 மீட்டர் உயரமும் கொண்ட பிரமாண்ட பாறை ஒன்று உள்ளது. இந்த பாறையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதிவாசி மக்கள் இயற்கை வர்ணங்களை பயன்படுத்தி வரைந்த ஓவியங்கள இன்னமும் அழியாமல் உள்ளன. இந்த பழங்கால பாறை ஓவியங்களை ஆதிவாசி மக்கள் பொறிவெறை என்று அழைக்கின்றனர். இதில் காட்டெருமை, மான், யானை, குதிரை, புலி, முதலை உள்ளிட்ட விலங்குகளின் உருவங்கள் காணப்படுகின்றன. மேலும் ஆதிவாசி மக்கள் இசை கருவிகளை வாசிப்பது, வில் மற்றும் அம்புகளை ஏந்தி வேட்டைக்கு செல்வது, யானை மற்றும் குதிரை மீது அமர்ந்து போருக்கு செல்வது போன்ற காட்சிகள் ஓவியங்களாக இடம்பெற்றுள்ளன. இதில் 500–க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன.

இந்த பாறை ஒவியங்கள் அமைந்துள்ள இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால், அங்கு தனியாக செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். ஆனால் தடையை மீறி அங்கு செல்லும் சிலர் ஓவியங்கள் இடம்பெற்றுள்ள பாறையில் அடுப்பு கரியை கொண்டு தங்களது பெயர்களை எழுதி வைத்து உள்ளனர். இதனால் அதிலுள்ள பழங்கால ஓவியங்கள் மறைந்து போக தொடங்கி உள்ளன. எனவே கரிக்கையூர் பாறை ஓவியங்களை பாதுகாக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த மாதம் 28–ந் தேதி ‘தினத்தந்தி‘ நாளிதழில் செய்தி வெளியானது.

இதனை தொடர்ந்து தமிழக தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் கரிக்கையூர் பாறை ஓவியங்களை ஆய்வு செய்தனர். அப்போது வனத்துறையினரும் உடனிருந்தனர். பின்னர் தொல்லியல் துறையினர் கூறும்போது, இந்த பாறை ஓவியங்கள் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதிவாசி இன இருளர் மக்களால் இயற்கை சாயங்களை கொண்டு வரையப்பட்டவை ஆகும். இந்தியாவில் உள்ள பாறை ஓவியங்களிலேயே கரிக்கையூர் ஓவியங்கள் தான் நீளமானவை. இந்த பாறை ஓவியங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றனர்.


Next Story