காரைக்குடி அருகே பயங்கரம்: கத்தியால் குத்தப்பட்டு பள்ளிக்கூட மைதானத்தில் பிணமாக கிடந்த வாலிபர்
கத்தியால் குத்தப்பட்டு அரசு பள்ளிக்கூட மைதானத்தில் பிணமாக கிடந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை கொலை செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கல்லல்,
காரைக்குடி கல்லல் அருகே வெற்றியூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி. அவருடைய மகன் குணசேகரன் (வயது 25). இவர் பிளஸ்–2 படித்து விட்டு கூலி வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்பு அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் குணசேகரன், வெற்றியூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பிணமாக கிடந்தார்.
இதை அந்த பகுதியில் உள்ளவர்கள் கவனித்து கல்லல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினார்கள். குணசேகரன் கழுத்து பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. எனவே அவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
விளையாட்டு மைதானத்தில் கிடந்த குணசேகரன் உடல் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்தார். குணசேகரன் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா, முனவிரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? அரசு பள்ளி மைதானத்தில் இந்த சம்பவம் நடந்ததா, அல்லது வேறு எங்காவது வைத்து கொலை செய்துவிட்டு பிணத்தை அரசு பள்ளி மைதானத்தில் தூக்கிப் போட்டுவிட்டு சென்றனரா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.