சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்; மாநகராட்சி அறிவிப்பு


சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்; மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Jun 2019 3:19 AM IST (Updated: 20 Jun 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

மதுரை,

மதுரை நகரில் சேரும் குப்பைகளை மறுசுழற்சி செய்வது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கமி‌‌ஷனர் விசாகன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்வது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 650 டன் முதல் 700 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெள்ளைக்கல்லில் கொட்டப்பட்டு திடக்கழிவு மேலாண்மை பணியின் மூலம் மறுசுழற்சி செய்து உரமாக தயாரிக்கப்படுகிறது.

குப்பைகளை குறைக்கும் வகையில் குப்பைகள் உற்பத்தியாகும் இடத்திலேயே தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய வேண்டும். 100 கிலோவிற்கு மேல் குப்பைகளை உருவாக்கும் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், குடியிருப்பு வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் ஆகியவை குப்பைகளை குப்பை கூடைகள், டம்பர் பின்களில் போடாமல் அவரவர் இடத்திலேயே குப்பைகளை தரம் பிரித்து அறிவியல் முறைப்படி உரமாகவும், பயோகேஸாகவும் உற்பத்தி செய்ய வேண்டும். இத்திட்டத்தை 100 சதவீதம் செயல்படுத்த வேண்டும்.

மாநகராட்சியின் மூலம் வைகையாற்றின் இரு கரைகள் மற்றும் 13 வாய்க்கால்களை தூய்மையாக பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சிந்தாமணி வாய்க்காலில் குப்பைகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் அடுத்த மூன்று மற்றும் நான்கு மாதங்களில் பேட்டரி வாகனங்கள் மூலம் வீடு வீடாக நேரடியாக குப்பைகளை வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் குப்பைகளை சாலையில் கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Next Story