நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் நீர் நிலைகளை தூர்வார வேண்டும் - மத்திய அரசு உத்தரவு


நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் நீர் நிலைகளை தூர்வார வேண்டும் - மத்திய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 19 Jun 2019 11:15 PM GMT (Updated: 19 Jun 2019 10:11 PM GMT)

புதுச்சேரி மாநிலத்தில் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி,

தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளை மூடும் நிலை உருவாகியுள்ளது. புதுவையிலும் சரிவர மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது. புதுச்சேரி மாநிலத்துக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஊசுடு, பாகூர் போன்ற முக்கிய ஏரிகளும் வறண்டுள்ளன. இதனால் புதுவையிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

இந்தநிலையில் மத்திய அரசு புதுவை அரசின் தலைமை செயலாளர் அஸ்வனி குமாருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பருவமழை, மழைநீர் சேகரிப்பு தொடர்பாக கடந்த 13-ந்தேதி அமைச்சரவை செயலாளர் ஆய்வுக்கூட்டம் நடத்தி உள்ளார். அதன்படி தண்ணீர் சேகரிப்பு தொடர்பாக நாடு முழுவதும் வருகிற 22-ந்தேதி கிராம அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து அமைப்புகள் இல்லாததால் அதிகாரிகளை கொண்டு கூட்டங்களை நடத்த வேண்டும். நிலத்தடி நீரை சேமிக்கவும், குடிநீரை பாதுகாக்கவும் ஏதுவாக மாநிலத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார வேண்டும். அவற்றில் அதிக அளவில் தண்ணீரை தேக்கிட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இந்த பணிகளில் மாவட்ட கலெக்டர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்கவேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story