தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 3 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் போலீஸ் விசாரணை


தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 3 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 21 Jun 2019 3:45 AM IST (Updated: 20 Jun 2019 10:19 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 3 நாட்டுத்துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவில் வனப்பகுதியில் சந்தேகத்திற்கு உரிய நபர்களின் நடமாட்டம் இருக்கிறதா? என்று கண்காணிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட நக்சலைட்டு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் தேன்கனிக்கோட்டையில் அஞ்செட்டி செல்லும் சாலையில் மல்லிகார்ஜூன துர்க்கம் என்னும் இடம் அருகே உள்ள வீரசெட்டி ஏரி பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு கேட்பாரற்று 3 நாட்டுத்துப்பாக்கிகள் கிடந்தன. அவற்றை நக்சலைட்டு தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த நாட்டுத்துப்பாக்கிகள் உரிமம் இல்லாத துப்பாக்கிகள் ஆகும். வனப்பகுதியில் யாரோ வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி இருக்கலாம் என்றும், போலீசாரின் கண்காணிப்பு பணிகளை அறிந்து துப்பாக்கிகளை போட்டு சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story